HOME | கவிதைகள் | பொன்மொழி | பொது அறிவு | ஓவியங்கள்  நகைச்சுவை  விருந்தினர் பதிவேடு

மழை


கதிரோனும் நீரும் கனிவுடனே கூடி
நீராவி எனும் மகவை பெற்று
அவள் வெண்முகில் எனும் பருவம் கடந்து
கார்முகில் எனும் பருவம் எய்தியவுடன்
வீசிளம் குளிர் தென்றலுக்கும் தன் மகளுக்கும்
மலைமுகடு எனும் மணமேடைதனில்
விவாகம் செய்ததன் விளைவாக
மணமாலை கொண்ட இல்லாள்
ஒப்பில்லா தாய்மை பேற்றினை அடைந்து
மாரிமழை எனும் மகவை பிரசவித்தாளோ?!

 

 

நட்பு அழிவதில்லை

 

கல்லூரியாம்
பூங்கொடியில் காண்
நட்பாம் நன்மலரே...
நீ சிறப்பாய்!

நட்பை மலர் என்றிடின்
காலமதை வாட்டிடுமே...
ஆம்!
அவ்வாட்டமே பிரிவாம்!
அத்துடன் முடிவுற்றதா?
அம்மலரின் பயணம்!

தன் வாட்டமாம் இறுதியில்
பதிவாம் விதையினை,
நெஞ்சமாம் பூமித்தாயிடம்
விதைத்து சென்றிட,
நினைவாம் நீரை
நிறைவாய் அளித்திடின்,
விதையாம் பதிவுகள்
விருட்சமாய் உருவெடுத்திட,
என்று முடியும் இப்பயணம்...

என்றும் முடிவதில்லை!
நட்பு என்றும் அழிவதில்லை!!
இதை மாற்றிட எவருமில்லை!!! 

 

ஒரு தாயின் குமுறல்


(
கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

மகனே!
கல்வி கற்று வந்திடுவாய்...
கனவுடனே காத்திருக்க,
நீ
கானலாய் ஆனதென்ன!

அதிகாலையில் சோறூட்டி
கைகழுவி விட்டேனே,
பதிலுக்கு விட்டாயோ
நீயும் கைகழுவி!

ஒரு கீறல் உன்னுடம்பில்
ஒத்திடாத நான்,
உனை
பெரும் உலைதனிலே
விட்டதென்ன!

கண்ணே! என்றழைத்தால்
கல்விதான் கண்ணம்மா
கற்று வருவேன் பெரியவனாய்...
நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?!

கன்னக்குழி அழகு பார்த்து
கண்பட்டு  போயிடுமே!
கரிதடவி விடுவேனய்யா...
யார் கண் பட்டதுவோ
நீ பட்டு போனாயே!

கால் பட்ட தீ தழும்பில்
களிம்பு தடவி விட்ட நான்,
உடல் பட்ட தீயதற்கு
ஒரு மருந்தும் தடவேனோ?!

கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?

அந்தி சாயும் வேளையிலே...
நீ வரும் வழி நோக்கி
விழி வைத்து
வலியோடிருப்பேனே...
இன்று வலிவிட்டு போனதடா!

வந்ததும் வராததுமாய்
கொடுத்து விட்ட அன்னமதை
குறைவையாமல் தின்றாயா?
கடிந்தே கேட்பேனே...
கோபமாடா என்னோடு?

இரவு...
படிக்கும் வேளைப் பொழுதினிலே,
இன்று
படித்து கொடுத்ததென்ன? கேட்டால்
அணிலே அணிலே ஓடிவா...
என்றுரைப்பாயே
எங்கேடா அம்மொழியும்?!

என்னுடனே கண்ணயர
இறுகபற்றும் கைகள் எங்கே?
என் மாரோடு அணைத்து வைக்கும்
மகனே உன் முகம்தான் எங்கே?

ஆலதுவாய் நானிருக்க,
விழுதெனவே நீயிருந்து
அடிபெயரா காத்திடுவாய்...
கண்டு வைத்த கனவதுவோ
ஊமைக்கனவு ஆனதடா?

அலட்சிய போக்கே இலட்சியமாம்
நிர்வாக()மே!
ஒழுங்காய் இருந்திடு
உந்தன் செயலில்.
கன்றுபோல இரண்டிருந்தும்
என் கை நடக்க இன்றில்லை.

இனியும் வேண்டாம்
எதிலுமே,
இச்செய்கை இந்நாட்டில்.
கட்டளை இட்டுரைக்கிறேன்
என் மகன் மீது சத்தியமாய்.

 

 பா. பார்த்தசாரதி